கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 31ஆவது வார்டுக்கு உட்பட்ட மாடன் கோவில் தெருவில், சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக 63 குடும்பங்கள் வசித்துவருகின்றன. மிகவும் வறுமை நிலையில் வாழும் இந்த மக்களின் வீடுகள் சட்டவிரோதமாக அரசு நிலத்தில் இருப்பதாகக் கூறி அவர்கள் வசிக்கும் வீடுகளை 21 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் என மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் கவலையடைந்தனர். மேலும் இதனால் அவர்களுக்கு உதவுமாறு நாகர்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் சுரேஷ்ராஜனிடம் முறையிட்டனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதியை சுரேஷ்ராஜன் நேரில் பார்வையிட்டார். அப்போது அவரிடம், திடீரென வீட்டை காலி செய்தால் தங்கள் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் என்பதால் இந்த கல்வி ஆண்டு முடியும் வரை அவகாசம் தர வேண்டும் எனவும், அரசு தங்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் எனவும் அப்பகுதியினர் கோரிக்கைவைத்தனர். இதனை கேட்டறிந்த அவர், மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து எடுத்துக் கூறி நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.