கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் இருளப்பபுரத்தைச் சேர்ந்த ரஞ்சன் என்பவர் வரலாற்றுத்துறை தலைவராக உள்ளார். அதே கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் மாணவிக்கு இவர், பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி கல்லூரி முதல்வர், பல்கலைகழக உயரதிகாரிகள் உள்ளிடோரிடம் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து இது தொடர்பாக விசாரணை செய்த மாவட்ட குழந்தை நல அலுவலர் குமுதா, வரலாற்றுத்துறை தலைவர் ரஞ்சன் மீது நாகர்கோவில் மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதனைத் தெரிந்துகொண்ட ரஞ்சன் தலைமறைவானார். பின்னர் போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவானவரைத் தேடி வருகின்றனர். துறைத் தலைவரே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.