கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு நடந்த கூட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். அக்கூட்டத்தில் அவர் பேசியதாவது, “தமிழ் தேசிய இனத்தின் எழுச்சி, அதன் பெருமை மிகு வாழ்க்கைக்கு, எந்தப் புரட்சிகர அரசியலை முன்னெடுக்கும், பலர் இதைத் தேர்தலாகப் பார்க்கிறார்கள், நாங்கள் இதை மாறுதலாகப் பார்க்கிறோம்.
எங்கள் கட்சி பதவிக்கானது அல்ல; மக்களின் உதவிக்கானது. எங்கள் அரசியல் பணத்திற்கானது அல்ல; இனத்திற்கானது; அதன் மானத்திற்கானது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மத அரசியல்தான் எடுபடும். அதனால் காங்கிரஸ் அல்லது பாரதிய ஜனதாதான் இருப்பார்கள் என என்னை பயம் காட்டினார்கள். இந்தப் படையைப் பார்த்து அவர்கள் பயந்து ஓடி இருப்பார்கள்.
ரஷ்யப் புரட்சியாளர் ஜோசப் ஸ்டாலின், “உலகில் வெல்ல முடியாத படைகள் இல்லை” என்கிறார். இது வெறும் சொறி சிரங்கு படைகள், இதை வெல்ல முடியாதா என்ன? வீழ்த்த முடியாதா என்ன? தமிழ்நாட்டில் அதிக கல்வியறிவு பெற்ற மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டம். படித்த இளைஞர்களே, உங்களை நம்பித்தான் இந்தப் புரட்சி அரசியலை நான் முன்னெடுத்து உள்ளேன்.
இந்த உலகத்தை எப்படிப்பட்ட மாற்றத்திற்கு கொண்டு வர வேண்டுமோ, அந்த மாற்றத்தை நம்மிடம் இருந்துதான் கொண்டுவர வேண்டும். நமக்குள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியவில்லை என்றால், நம்மால் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. அதனால் மாற்றுவோம்.
அந்த மாறுதலுக்கான நாள்தான் ஏப்ரல் 6. மக்களாட்சித் தத்துவத்தை மக்களாட்சி கோட்பாட்டை ஏற்றுக்கொண்ட நாட்டில், வாக்கு என்பது வலிமைமிக்க ஆயுதம். இங்குதான் தூக்க வேண்டியது துப்பாக்கி அல்ல, வாக்கு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
கச்சத்தீவை கொடுத்தது கொடுத்ததுதான் என்பதில் இருவரும் ஒன்றாக உள்ளனர். காங்கிரஸ் பாரதிய ஜனதா இரண்டு கட்சிதான் வேறு; கொள்கை வேறல்ல. பொருளாதாரக் கொள்கை, தனியார்மயம், தாராளமயம் இதுதான் அவர்கள் கொள்கை. சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு, நாட்டில் ராணுவ தளவாட முதலீட்டில் 100 விழுக்காடு, அந்நிய முதலீடு, கல்வியிலும் அதுதான்.
சாலை சீரமைப்பு சுங்கச்சாவடி தனியார்மயம் இதுதான் அவர்களின் ஒரே கொள்கை. இது கதர் சட்டை போட்ட காங்கிரஸ். அது காவி போட்ட பாரதிய ஜனதா. இரண்டு பேருக்கும் ஒரே கொள்கைதான். இந்தியாவை விரைவில் விற்றுவிட்டு, யார் கல்லா கட்டுவது என்பதுதான் அவர்கள் நோக்கம்.
கல்வியைத் தனியார் முதலாளிகளின் லாபம் கொழிக்கும் இடமாக மாறிவிட்டது இந்த அரசு. மருத்துவம் ஒரு மகத்தான சேவை, அது மக்களுக்குத் தேவை என்ற புரட்சியை நான் உருவாக்க நினைக்கிறேன். உயிர்காக்கும் மருத்துவம் ஒரு மிகப்பெரிய சந்தை வர்த்தகம். சாமானிய மக்களுக்கும் அது கிடைக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
இட ஒதுக்கீடு எதற்காக உருவானது? எந்த ஜாதியின் அடிப்படையில் கல்வி வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டதோ, அதற்கான அடிப்படையில்தான் இட ஒதுக்கீடு, வகுப்புவாரி பிரதிநிதித்துவம் உருவாக்கப்பட்டது. பொருளாதாரத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு கிடையாது. ஜாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகளுக்குத் தரகு வேலை பார்த்து கையெழுத்துப் போட்டு தரகுத்தொகை வாங்குவதைவிட, இந்த அரசின் வேலை என்னவாக இருக்க முடியும். இந்நாட்டை இந்நிலைக்கு கொண்டுவந்தவர்கள் காங்கிரசும், பாரதிய ஜனதாவும்தான். இவர்கள்தான் எல்லாவற்றையும் விற்றுவிட்டார்கள்.
இப்போது சென்னை காட்டுப்பள்ளியில் அதானி துறைமுகம் கட்டுகிறார். இங்கே இணையத்திலும் அவர்தான் கட்டுகிறார். நாங்கள் மீன்பிடித்து வாழ்வதற்கு துறைமுகம் வேண்டும் என்கிறோம், இவர்கள் சரக்கு ஏற்றி இறக்குவதற்கு துறைமுகம் கொண்டுவருகிறோம் என்கிறார்கள்.
நீங்கள் எங்கள் நாட்டு வளத்தைச் சுரண்டி கொண்டுபோய் விட்டு, வெங்காயத்தையும் பருப்பையும் இறக்குமதி செய்வீர்கள். தூத்துக்குடியில் இருக்கும் துறைமுகத்திலும், சென்னையில் இருக்கும் துறைமுகதித்திலும் 27 விழுக்காடுதான் ஏற்றுமதி நடக்கிறது. பின்னர் எதற்கு இங்கு துறைமுகம்” எனப் பேசினார்.
இதையும் படிங்க: இது திராவிட மண், மோடி மஸ்தான் வேலை எல்லாம் இங்குப் பலிக்காது - ஸ்டாலின்