கன்னியாகுமரியில் உள்ள அரசு மருத்துவமனையில் சுற்றுவட்டாரப் பகுதி மக்களும் சுற்றுலாப் பயணிகளும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த மருத்துவமனையில் பல குறைபாடுகள் உள்ளன என தொடர்ந்து புகார்கள் எழுந்துவந்த நிலையில் கன்னியாகுமரி தொகுதி மக்களவை உறுப்பினர் வசந்தகுமார், இன்று திடீரென அங்கு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் பிரசவ வார்டு, குழந்தைகள் பிரிவு, ஆண்கள், பெண்கள் சிகிச்சைப் பகுதி, ரத்த வங்கி ஆகிய பிரிவுகளுக்குச் சென்று ஆய்வுசெய்தார். அப்போது அவரிடம் அங்கு நின்று கொண்டிருந்த நோயாளிகளும் பொதுமக்களும் மருத்துவமனையின் குறைபாடுகளை எடுத்துக்கூறினர். இதையடுத்து அங்குள்ள மருத்துவ அலுவலரிடம் மக்கள் பிரச்னைகள் குறித்து வசந்தகுமார் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "உள்நோயாளிகள், வெளிநோயாளிகள் என தினமும் ஏராளமானோர் வந்து சிகிச்சை பெற்றுசெல்கின்ற நிலையில் மருத்துவமனையில் சரி செய்யக்கூடிய குறைபாடுகள் ஏராளமாக உள்ளன. குறிப்பாக தண்ணீர் டேங்க் இருந்தும் மின்மோட்டார் வசதி இல்லாததால் தண்ணீரின்றி உள்ளது" என்றார்.
மேலும், மருத்துவமனையில் ஆண் பணியாளர்கள் இல்லாததைக் குறிப்பிட்ட அவர், இரவு நேர மருத்துவர் முழு நேரமும் பணியில் இருந்தால் நோயாளிகள் பலர் சிகிச்சை பெற வசதியாக இருக்கும் எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், மருத்துவமனை வளாகத்தில் உள்ள புற்களை அகற்றுவதோடு நிரந்தரமாக ஆம்புலன்ஸ் வசதியும், பிணவறை வசதியும் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இப்பிரச்னைகள் குறித்து மனுவை தன்னிடம் அளிக்குமாறு தலைமை மருத்துவரிடம் கேட்டுள்ளதாகத் தெரிவித்த வசந்தகுமார், அதனை மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநர், அல்லது மாநில மருத்துவ செயலாளர் ஆகியோரிடத்தில் அளிக்கவுள்ளதாக கூறினார்.
இதையும் படிங்க: புழல் அருகே வியாபாரியை வெட்டி ரூ. 20ஆயிரம் வழிப்பறி!