கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அடுத்த துவரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் தாயம்மாள். இவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவரது இரண்டாவது மகனான பியூட்டலின் (28), வெள்ளிச்சந்தை பகுதியைச் சேர்ந்த சரண்யா என்பவரை காதலித்துவந்தனர்.
காதலர்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டார் இருவரின் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்பையும் மீறி கடந்த 23ஆம் தேதி பியூட்டலின் தனது உறவினர்கள் முன்னிலையில் சரண்யாவை திருமணம் செய்துகொண்டார்.
திருமணமான மறுநாள், வெள்ளிச்சந்தை காவல் துறையினர் விசாரணைக்காக காவல் நிலையத்தில் முன்னிலையாகும்படி கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து 25ஆம் தேதி பியூட்டலின், அவரது மனைவி சரண்யா, உறவினர்கள் வெள்ளிச்சந்தை காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளனர்.
அப்போது, காவல் நிலையத்திற்கு வெளியே பதுங்கியிருந்த சரண்யாவின் உறவினர்கள், திடீரென பியூட்டலினை சரமாரியாகத் தாக்கியதோடு சரண்யாவை காரில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த பியூட்டலின், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
இந்நிலையில், பியூட்டலின் தாயார் தாயம்மாள் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், "எனது மகனைத் தாக்கி மருமகளை எங்களது கண்முன்னே அவரது உறவினர்கள் தூக்கிச் சென்றுவிட்டனர். இதில், படுகாயமடைந்த பியூட்டலின் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
உறவினர்களால் கடத்தப்பட்ட எனது மருமகளின் தற்போதைய நிலை என்னவென்று தெரியவில்லை. ஒருவேளை அவரது உறவினர்கள் அவரை ஆணவக்கொலை செய்யக்கூடும். எனவே, காவல் துறையினர் உடனடியாக எனது மருமகளை மீட்டு என்னிடம் ஒப்படைப்பதுடன் தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காதல் திருமணம் செய்த ஒரே மாதத்தில் தூக்கில் தொங்கிய இளம்பெண்!