சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அதிமுக-பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த மார்ச் 30ஆம் தேதி தாராபுரத்தில் பரப்புரை மேற்கொண்டார்.
இந்நிலையில் இன்று இரண்டாம்கட்டமாக கன்னியாகுமரியில் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக, கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் நரேந்திர மோடி பரப்புரை மேற்கொள்கிறார்.
இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர்.
முன்னதாக, இன்று காலை 11 மணிக்கு மதுரையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, மாலை கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கல்லூரி வளாகத்துக்கு வருகிறார்.
அங்கு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி, கார் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்குச் செல்கிறார்.
பிரதமரின் வருகையையொட்டி மதுரையிலும், கன்னியாகுமரியிலும் காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் ஐந்தாயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேபோல, நாளை (ஏப்ரல் 3) காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருவதால் அங்கு காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: வேட்டி, சட்டையில் பிரதமர் மோடி.. மதுரை மீனாட்சி கோயிலில் சாமி தரிசனம்..