கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 'ஒரே நாடு - ஒரே குடும்ப அட்டை' எனக்கூறி ரேசன் திட்டத்தை முடக்கக் கூடாது.
நீர்நிலை, புறம்போக்குகளில் வசிப்போருக்கு அரசு அறித்த மூன்று சென்ட் வீட்டுமனை, இலவச வீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"இந்தியப் பிரதமர், சீன அதிபர் மாமல்லபுரத்தில் சந்திப்பது வரவேற்கத்தக்கது. இது இரண்டு நாடுகளுக்கிடையே நல்லுறவை ஏற்படுத்தும்.
மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களின் வரியைக் குறைப்பது உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கி விட்டு, ஏழைகளுக்கான வாழ்வு ஆதாரத்தை அழிக்கும் வகையில் ரேஷன் அரிசி மற்றும் 100 நாள் வேலை வாய்ப்பை குறைக்கத் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் வெற்றி பெறும்.
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. மக்களவை, சட்டமன்றங்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுவது போன்று உள்ளாட்சித் தேர்தலையும் முறையாக அதே காலகட்டத்தில் நடத்தவேண்டும்" என்றார்.
விவசாய சங்கத்தினர் நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சென்னையில் திபெத்தியர்கள் கைது