இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட மார்த்தாண்டம் கருங்கல் சாலையில், விரைவில் அமைய இருக்கும் ரயில்வே மேம்பாலத்தை தற்போது இருக்கும் சாலை வழியாகவே அமைக்க வேண்டும்.
மத்திய அரசு கன்னியாகுமரி மாவட்ட சூழலியல் பாதுகாப்பு மண்டல அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதனை பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் காடுகளை எல்லையாகக் கொண்டு புதிய அரசிதழை வெளியிட மாநில அரசு ஆவன செய்ய வேண்டும்.
மாவட்டத்தில் மூடப்பட்ட கல் குவாரிகளை மீண்டும் திறக்க வேண்டும். விளவங்கோடு தாலுகாவில் நெய்யாறு இடதுகரை கால்வாயில் தண்ணீர் வராததால் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்துள்ளது. இடைக்கோடு பேரூராட்சி அருகே முல்லையாற்றின் குறுக்கே அணை கட்டி, தண்ணீரை நெய்யாறு இடதுகரைக்கு விட ஏற்பாடு செய்ய வேண்டும்.
கடையல் பேரூராட்சியையும் திற்பரப்பு பேரூராட்சியையும் இணைக்கும் தெற்பக்கடவு பாலத்தை கட்டவும், ராஜாக்கமங்கலம், அளத்தங்கரை, பனையூர், தர்மபுரம் இடையே உள்ள பாழடைந்த உப்பளத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம், மென்பொருள் பூங்கா அமைக்கவும் அரசு ஆவன செய்ய வேண்டும்.
நாகர்கோவிலில் காவல் ஆணையர் பணியை உருவாக்க வேண்டும். மேலும், புதிதாக நிறுவப்பட்ட குழித்துறை, உண்ணாமலைக்கடை, களியக்காவிளை நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு புதிய மருத்துவமனை கட்டடம் கட்ட வேண்டும் ” ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: தன் தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளைப் பிரிக்க மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் - விஜயதாரணி மனு