கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அடுத்த வாரியூரில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு 300க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், குமரியில் பெய்து வரும் கனமழை காரணமாக, அந்த பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படும் அவல நிலை உருவாகியுள்ளது.
மேலும், கழிவறைகள் முழுவதும் மழை நீரில் மூழ்கியதால் மாணவர்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து ஈடிவி பாரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காணொலியுடன் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக, கன்னியாகுமரி தொகுதியின் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஆஸ்டின் இன்று வாரியூர் பள்ளிக்குச் சென்றார்.
அப்போது, பள்ளி வளாகத்தில் தேங்கியிருந்த மழை நீரை பார்வையிட்ட அவர், உடனடியாக மாவட்ட கல்வி அலுவலர், அஞ்சுகிராமம் செயல் அலுவலர் ஆகியோரைத் தொடர்புகொண்டு மழை நீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து மழை நீரை வெளியேற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.