கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைக்குளம் பகுதியிலுள்ள முகிலன் குடியிருப்பு கடற்கரையில் நேற்று (ஜூலை 10) இளைஞர் ஒருவரின் உடல் இறந்த நிலையில் கரை ஒதுங்கிக் கிடப்பதாக தென்தாமரைக்குளம் காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின்பேரில் தென்தாமரைக்குளம் காவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று இளைஞரின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், ராஜக்கமங்கலம் காவல் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கணபதிபுரம் தளவாய்புரத்தைச் சேர்ந்த ஜான்சி அன்னம்மா என்பவர், பாலிடெக்னிக்கில் முதலாமாண்டு படிக்கும் தனது மகன் ஆன்றோ பெர்லினை (18) காணவில்லை எனப் புகார் அளித்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து ஜான்சி அன்னம்மா கூறிய அடையாளங்களை வைத்து இறந்தது அவரது மகன் ஆன்றோ பெர்லின் என்பது உறுதியானது. இதனையடுத்து ஆன்றோ பெர்லின் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:வாகனத் தணிக்கையில் ஏற்பட்ட மோதல்... உயிரை மாய்த்துக்கொண்ட திருநங்கை!