கன்னியாகுமரி மாவட்டம் புதுகடையைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் சொந்தமாகப் பொக்லைன் வாகனம் வைத்துள்ளார். இவர் அரசு ஒப்பந்ததாரரான முன்சிறை ஒன்றிய அதிமுக செயலாளர் ஜீன்ஸ் என்பவரிடம் அரசு ஒப்பந்த பணிகளுக்குப் பொக்லைன் வாகனத்தை வாடகைக்கு விட்டுள்ளார்.
இவருக்குத் தொழில்ரீதியாக மூன்றரை லட்சம் ரூபாய் ஜீன்ஸ் கொடுக்கவேண்டி இருப்பதாகவும், அதைக் கேட்டதில் இவர்களுக்குள் தகராறு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இச்சூழலில் புதுக்கடை பகுதியில் சுரேஷ் வந்துகொண்டிருந்தபோது, ஜீன்ஸ் அடியாள்கள் சிலருடன் வந்து, சுரேஷை கம்பி, கட்டையால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த பொக்கலைன் ஓட்டுநர் சுரேஷ் தலையில் பலத்த காயங்களுடன் கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆளும் கட்சியினர் என்பதால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் வழக்குப்பதிவு செய்ய புதுக்கடை காவல் துறையினர் தயக்கம் காட்டிவருவதாக அவர் தெரிவித்தார்.