கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கிவரும் ஸ்ரீமுகாம்பிகை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு படிப்பை முடித்தவர் பாலசுந்தரராஜ்.
இவர் சென்னையில் உள்ள மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "மூகாம்பிகை மருத்துவக் கல்லூரியில் படிப்பை முடித்த நான், பயிற்சியை மட்டும் முடிக்க வேண்டியது இருந்தது. எனது பெற்றோர் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்றுவருவதால் அங்கு பயிற்சியை மேற்கொள்வதற்காக சான்றிதழ்களை வழங்க கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டேன்.
ஆனால் கல்லூரி நிர்வாகம் சான்றிதழ்களை வழங்கவில்லை. இது தொடர்பாக நான் தொடர்ந்த வழக்கில், கட்டண பாக்கி ரூ.75 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு சான்றிதழ்களை வழங்க உயர் நீதிமன்றம் கல்லூரிக்கு உத்தரவிட்டது. அதன்படி, என்னிடமிருந்து பணத்தை பெற்றுக்கொண்ட கல்லூரி நிர்வாகம் சான்றிதழ்களை வழங்கியது.
ஆனால், மாற்றுச் சான்றிதழில் ‘எனது நன்னடத்தை திருப்திகரமாக இல்லை’ என்று குறிப்பிட்டு வழங்கியுள்ளதால் எனது எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, எனக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ். தமிழ்வாணன் - உறுப்பினர்கள் பாஸ்கரன், லதா மகேஸ்வரி ஆகியோர், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மனுதாரர் கட்டண பாக்கியை செலுத்திவிட்டதால் கல்லூரி நிர்வாகம் முறையாக நன்னடத்தை சான்றிதழை வழங்கியிருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டனர்.
உள்நோக்கத்தோடு மனுதாரரின் நன்னடத்தை திருப்திகரமாக இல்லை என்று சான்றிதழில் குறிப்பிட்டதற்கு தனது கண்டனத்தையும் நீதிபதி தெரிவித்தார்.
மேலும், மனுதாரரின் எதிர்காலம் பாதிக்கின்ற வகையில் கல்லூரி நிர்வாகம் நடந்து கொண்டது சட்டத்துக்கு புறம்பானது என்றும் எனவே, மனுதாரருக்கு கல்லூரி நிர்வாகம் இழப்பீடாக ரூ.20 லட்சமும் வழக்கு செலவுக்காக ரூ.10 ஆயிரமும் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.