கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி அடுத்த மார்த்தாண்டபுரம் பகுதியைச் சேர்ந்த 63 வயது முதியவர் புற்றுநோய் காரணமாக சென்னையில் சிகிச்சைப் பெற்று வந்தார். உடல்நிலை மோசமான நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துவரப்பட்ட அவர், நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 9ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
இருந்தபோதிலும், அவர் சிகிச்சைப் பலனின்றி அன்றிரவு உயிரிழந்தார். முன்னதாக, அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இறந்த பின்பு வெளிவந்த சோதனை முடிவில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து அவருடன் ஆம்புலன்ஸில் வந்த அவரது மகன் தனிமைப்படுத்தப்பட்டார்.
தற்போது, அவரின் மகனுக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பின்னர், அவர் தங்கியிருந்த மயிலாடு, மார்த்தாண்டபுரம் பகுதி முழுவதையும் சுகாதாரத் துறையினர் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு 53 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இப்பகுதி மக்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வழங்க மயிலாடி பேரூராட்சி செயல் அலுவலர் அகத்தியலிங்கம் நடவடிக்கை எடுத்துவருகிறார். கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையிலான காவல் துறையினர் அப்பகுதியில் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: போட்டோக்கு போஸ் கொடுத்துவிட்டு எந்த பணியும் செய்யவில்லை - எம்எல்ஏவிடம் வாக்குவாதம்