கன்னியாகுமரி நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்பவர், பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ளார். இந்நிலையில், அவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், “ ஏப்ரல் 25 ஆம் தேதியன்று என் மீது ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் என் மீதான புகார் கூறப்பட்டது . தொடர்ந்து கோட்டாறு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கில் நான் கைது செய்யப்பட்டேன்.
இதை தொடர்ந்து என் மீது புகார் தெரிவிப்பவர்கள் தெரிவிக்கலாம் என கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையினர் ஒரு அறிவிப்பை வெளியிட்டனர். இதைத்தொடர்ந்து நேசமணி , வடசேரி ஆகிய காவல் நிலையங்களில் என் மீது கொடுக்கப்பட்ட பல புகார்களின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, மார்ச் 13 ஆம் தேதியன்று நாகர்கோவில் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .
அதில் இந்த வழக்கில் எனக்கு ஆதரவாக எந்த வழக்குரைஞர்களும் ஆஜராக மாட்டோம் என்று முடிவு செய்து, தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இந்நிலையில் ஆகஸ்ட் 5 ஆம் தேதியன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது . தற்போது, நாகர்கோவில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. சாட்சிகளிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் எனது தரப்பு வாதங்களை வெளிப்படுத்த எனக்கு சட்ட உதவி செய்வதற்கு வழக்குரைஞர்களும் முன்வர வில்லை. என்னால் எனது தரப்பு வாதங்களை எடுத்து வைக்க முடியவில்லை . மேலும், என்னை வலுக்கட்டாயமாக குறுக்கு விசாரணை மேற்கொள்ள கூறுகிறார்கள். ஒரு தரப்புக்கு சட்ட உதவி இல்லாமல் வழக்கு நடத்தி தீர்ப்பு வழங்கினால் அது ஏற்புடையதாக இருக்காது. அது அடிப்படை உரிமைக்கு எதிரானது .
எனவே என் மீதான வழக்குகளை வேறு மாவட்ட நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு மாற்றும் வரை நாகர்கோவில் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிப்பதற்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும். மேலும், நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடைபெறும் என் மீதான வழக்கு விசாரணையை வேறு மாவட்டத்திற்கு மாற்றி உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது , இது தொடர்பான மற்ற வழக்குகளோடு சேர்த்து பட்டியலிட உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: பெண்களை ஏமாற்றிய காசி... ஐந்து நாள்கள் காவலில் விசாரணை!