திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் தொடர்ந்து திமுக வேட்பாளர் அப்பாவு முன்னிலை வகிக்கிறார். முன்னதாக இதே தொகுதியில், 2006ஆம் ஆண்டு போட்டியிட்ட இவர் கணிசமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
அப்பாவு கடந்து வந்த பாதை!
2016ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் இன்பதுரைக்கு எதிராக திமுக சார்பில் அப்பாவு களமிறக்கப்பட்டார். இவர்கள் இருவரிடையேயும் கடும் போட்டி நிலவியது. வாக்கு எண்ணிக்கையின் இறுதிச் சுற்றில் 45 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றிபெற்றார்.
ஆனால், 203 அஞ்சல் வாக்குகள் எண்ணப்படவில்லை என இன்பதுரையின் வெற்றிக்கு எதிராக அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இதையடுத்து மூன்று சுற்றுகளில் பதிவான வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டன. தொடர்ந்து உச்ச நீதிமன்றத்துக்குச் சென்ற இந்த வழக்கின் தீர்ப்பு இன்னும் வெளியாகாத நிலையில், 2021ஆம் ஆண்டு தேர்தலே வந்துவிட்டது. இந்த முறையும் திமுக சார்பில் அப்பாவும், அதிமுக சார்பில் அதே இன்பதுரையும் போட்டியிட்டுள்ளது எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.