கன்னியாகுமரி: தேரூர் பகுதியை சேர்ந்தவர் தர்ஷினி பிரியா 20 வயதான இவரும், நெல்லை மாவட்டம் காவல் கிணறு பகுதியை சேர்ந்த மரிய ஜெபஸ்டின் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதலித்து வந்த சம்பவம் தர்ஷினி பிரியாவின் பெற்றோருக்கு தெரியவந்ததால் கடும் எதிர்பு தெரிவித்துள்ளனர். ஆகையால் தர்ஷினி பிரியா தனது வீட்டைவிட்டு வெளியேறி காதலன் மரிய ஜெபஸ்டின் உடன் சென்னைக்கு சென்றுவிட்டார்.
பின்னர் அவர்கள் கடந்த 10ம் தேதி சென்னை தாம்பரம் பகுதியில் உள்ள சேலையூர் பாத்திமா ஆலயத்தில் நண்பர்கள் முன்னிலையில் மாலை மாற்றி, தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர். பின்பு சேலையூர் காவல் நிலையத்திற்கு சென்று தங்கள் குடும்ப வாழ்க்கைக்கு தங்கள் பெற்றோரால் பிரச்சனை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தர்ஷினி பிரியா புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் அவர்களை விசாரித்த போலீசார் புகார் மனு பெற்றதற்கான பதிவு சீட்டை கொடுத்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தர்ஷினி பிரியா காதலனை திருமணம் முடித்து தாம்பரம் பகுதியில் வசித்து வருவதை அறிந்த இளம்பெண்ணின் பெற்றோர், அங்குச் சென்று மகளை வலுக்கட்டாயமாக தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த தர்ஷினி பிரியா தனது தாய் வீட்டில் வைத்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதனால் உடனடியாக ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தர்ஷினி பிரியா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் தர்ஷினி பிரியா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட இருப்பதாகவும் தன்னை அங்கு வந்து அழைத்துச் செல்லுமாறும் காதலனும் தனது கணவனுமான மரிய ஜெபஸ்டினுக்கு தகவல் கொடுத்து உள்ளார்.
இதனால் மரிய ஜெபஸ்டின் தன்னுடைய நண்பர்களுடன் ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்தார். இதனை அறிந்த இளம் பெண்ணின் பெற்றோர் தங்கள் உறவினர்களுடன் அவளை அங்கிருந்து வீட்டிற்கு கொண்டு செல்ல முயன்றனர். அப்போது தன் மனைவியை தன்னுடன் அனுப்பும்படி மரிய ஜெபஸ்டின் கூறியதால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இந்த தகவல் கிடைத்தது அங்கு வந்த ஆரல்வாய்மொழி போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அங்கு நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் திருமணமான அந்த இளம் பெண்ணை அவரது தாயாருடன் அனுப்பி வைத்தனர். தர்ஷினி பிரியா தான் காதலுடன் தான் செல்வேன் என அடம் பிடித்தும் அவர்களை போலீசார் இளம் பெண்ணின் தாயார் உடன் வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தனர்.
இளம்பெண்ணை அவரது தாயார் இழுத்துக் கொண்டு காரில் ஏற்றி செல்லும் காட்சிகள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 20 வயதை கடந்த இளம் பெண், காதலனுடன் திருமணம் செய்து கொண்ட பின்னர் அவரது விருப்பத்திற்கு மாறாக ஆரல்வாய்மொழி போலீசார் இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக பெற்றோருடன் அனுப்பி வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை இளம் பெண்ணின் கணவரான இளைஞர் மரிய ஜெபஸ்டின் ஏதும் செய்ய முடியாமல் பரிதாபமாக நடப்பதை பார்த்து கொண்டு நின்றார்.
இதையும் படிங்க: தாம்பரத்தில் லாட்டரி விற்பனை: ரூ.8 லட்சம் பறிமுதல் - இருவர் கைது!