கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அடுத்த கல்லத்திவிளை பகுதியை சேர்ந்தவர் சபிதா (20). இவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த மனுவில், நான் லட்சுமிபுரம் அரசு கலை - அறிவியல் கல்லூரியில் பிஏ தமிழ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறேன். நான் கல்லூரிக்கு செல்லும்போது கண்டன்விளை பகுதியை சேர்ந்த அஜித் குமார் என்பவரை பார்த்து பேசி பழகி வந்தேன்.
நாங்கள் இருவரும் கடந்த ஒரு ஆண்டு காலமாக காதலித்து வந்தோம். எங்கள் காதல் வீட்டிற்கு தெரிய வந்தது. நாங்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். ஆகையால் எங்களது காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எனவே எங்களை பிரித்து விடுவார்கள் என்று பயந்து டிசம்பர் 14ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி கிறிஸ்தவ ஆலயத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டோம். எங்களது திருமணத்திற்கு எனது வீட்டில் உள்ளவர்கள் தொடர்ந்து பிரச்னை செய்து வருகிறார்கள்.
நாங்கள் இருவரும் உரிய வயதை அடைந்தவர்கள். எங்களது வாழ்க்கையினை அமைத்துக் கொள்ளும் உரிமை எங்களுக்கு உண்டு. என்னை யாரும் கடத்தவில்லை. எனது முழு விருப்பத்தின்படி நான் காதலித்தவரை திருமணம் செய்து கொண்டேன். என்னை காணவில்லை என புகார் மனு ஏதாவது இருந்தால் அதனை முடித்து வைக்க வேண்டும். மேலும் எனக்கும் எனது கணவருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தார்.