கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பகுதியில் தேமுதிக மாநில தொழிற்சங்க துணைத் தலைவர் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட தேமுதிக மாநில இளைஞரணி செயலாளர் எல்.கே. சுதீஷ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது தவறு. நீட் தேர்வை கண்டு பயப்படவேண்டாம்.
நீட் என்பது தமிழ்நாடு அரசு மட்டும் முடிவு செய்யும் விவகாரம் அல்ல. இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் சேர்ந்து முடிவெடுப்பது. தமிழ்நாட்டு மக்களை திசை திருப்ப அரசியலுக்காக திமுக நீட் எதிர்ப்பு போராட்டங்களைச் செய்கிறது. நீட் உள்ளிட்ட காரணங்களால் தற்கொலை செய்யும் மாணவர்களின் குடும்பத்திற்கு அரசு சார்பில் எந்த உதவிகளையும் செய்யக்கூடாது. இது தற்கொலைக்கு தூண்டும் செயல்.
நீதிமன்றம் குறித்து சூர்யா பேசியதற்கு பதிலாக வேறு ஏதாவது சொல்லியிருக்கலாம். தமிழ்நாட்டில் உள்ள எந்த ஒரு அரசியல் கட்சியும் கூட்டணி குறித்து தற்போது பேசவில்லை. தேமுதிகதான் தமிழ்நாட்டில் பலமான கட்சி என்பதால் எங்களது கூட்டணியைத்தான் எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரும் ஜனவரி மாதம் முதல் மக்களைச் சந்திக்க வெளியே வருவார்" என்றார்.
இதையும் படிங்க: விஜயகாந்த் குறித்து கார்ட்டூன் - நாளிதழ் மீது புகார்