கன்னியாகுமரி: திட்டுவிளையில் சிறுவன் ஆதில் இறந்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்ட போலீசாரை தற்போது திகைக்க வைத்துள்ளது. சிறுவனின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகக் கூறி போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில் கேரள முதலமைச்சர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறுவனின் இறப்பு குறித்து உரிய விசாரணை செய்து குற்றவாளியை விரைந்து கைது செய்யுமாறு கடிதம் அனுப்பியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்ட போலீசார் மட்டுமில்லாமல் தமிழ்நாடு காவல் துறையுமே தற்போது இந்த வழக்கை திரும்பிப்பார்க்க வைத்துள்ளது ஒரு கடிதம்.
சிறுவன் சடலமாக மீட்பு: திட்டுவிளையைச் சேர்ந்தவர் சபிதா. இவருடைய கணவர் நிஜிபூ கேரள மாநிலம், கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர். அவர் அங்கே கட்டட ஒப்பந்தப் பணிகளை செய்து வருகிறார். கோடை விடுமுறைக்காக கொல்லத்திலிருந்து சபிதாவும் அவருடைய குழந்தைகளும் கன்னியாகுமரி மாவட்டத்தில் திட்டுவிளையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளனர். அந்த நேரத்தில் அவருடைய இரண்டாவது பையன் ஆதில்(12) சந்தேகத்திற்குரிய முறையில் குளத்தில் மூழ்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கொலை நடந்த 2 நாட்கள் கழித்து குளத்திலிருந்து சிறுவனின் உடல் போலீசாரால் மீட்கப்பட்டது. இது குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
சிசிடிவி காட்சிகள்: முன்னதாக, கன்னியாகுமரி அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் சிறுவனின் உடலை உடற்கூராய்வு செய்தபின் முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இறந்த சிறுவன் ஆதிலை சிவப்பு நிற சட்டை அணிந்த ஒரு சிறுவன் அழைத்துச்சென்ற சிசிடிவி காட்சிகளும் அதன்பின்னர் அழைத்துச்சென்ற சிறுவன் மட்டும் தனியாக திரும்பி வரும் சிசிடிவி காட்சிகளும் போலீசார் கையில் கிடைத்துள்ளன.
போலீசார் மீது குற்றச்சாட்டு: ஆனாலும், கொலை நடந்து 52 நாட்கள் ஆகியும் விசாரணையில் எந்த துப்பும் கிடைக்காததால் மாணவர் ஆதிலின் மரணம் ஒரு சந்தேகமாகவே இருந்து வருவதாக திட்டுவிளை ஊர் மக்கள் கூறி வருகின்றனர். அதனோடு இந்த விவகாரத்தில் கன்னியாகுமரி மாவட்ட போலீசாரின் விசாரணையில் மக்களுக்கு நம்பிக்கை இல்லாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பலரும் குற்றம்சாட்டியுள்ளனர்.
கேரள முதலமைச்சரிடம் முறையிட்ட தந்தை: சிறுவன் இறந்து 52 நாட்களாகியும் இதுவரை விசாரணையில் எந்த ஒரு துப்பும் கிடைக்காமல் விசாரணையில் முன்னேற்றம் ஏதும் இல்லாத காரணத்தால் பாதிக்கப்பட்ட ஆதிலியின் தந்தை நிஜிபூ கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உட்பட கேரளாவில் உள்ள அமைச்சர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து தன்னுடைய மகனுக்கு நேர்ந்த சோகம் குறித்தும்; இது குறித்து தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்ட போலீசார் மேற்கொண்டு வரும் விசாரணையில் ஒரு முடிவும் எட்டப்படாத நிலை குறித்தும் விளக்கினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வந்த கடிதம்: மேலும், இது குறித்து உரிய முறையில் விசாரணை மேற்கொள்ளவும் தனது மகனின் இறப்பிற்கு நியாயம் கிடைக்கவேண்டும் எனவும் சரியான முறையில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் கோரிக்கை வைத்துள்ளார், அச்சிறுவனின் தந்தை. இதன் பொருட்டு கேரள முதலமைச்சர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறுவன் ஆதிலின் இறப்பில் உரிய விசாரணை மேற்கொண்டு சிறுவனை கொலை செய்த குற்றவாளியை விரைந்து கைது செய்யவேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளார்.
ஆடிப்போயிருக்கும் தமிழ்நாடு போலீசார்: இந்நிலையில், இது குறித்து கேரள முதலமைச்சர் மட்டுமில்லாது கேரளாவின் ஏனைய அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் மூலம் சிறுவன் ஆதிலியின் இறப்பு குறித்த விசாரணையை கன்னியாகுமரி மாவட்ட போலீசாரிடமிருந்து சிபிசிஐடிக்கு மாற்றவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, இறந்த சிறுவன் ஆதிலியின் இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று கோரிக்கையை கேரள அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமில்லாது முதலமைச்சர் பினராயி விஜயன் வரையில் கடிதம் அனுப்பியுள்ளது கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: இன்ஸ்டாகிராமில் கஞ்சா ஆர்டர் செய்து விற்பனை - பொறியியல் பட்டதாரி மூவர் கைது