நாகர்கோவில் அருகே உள்ள கோட்டாரில் தென்குமரி தமிழ்ச் சங்கம் சார்பில் குமரிக் கண்டம் என்ற பெயரில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பல்வேறு தமிழ் அறிஞர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், உலகத் தமிழ் ஆராய்ச்சியாளர்கள், ஐநூறுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர். இந்தக் கருத்தரங்கில் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷையன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், குமரிக் கண்டம் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்றுவருவதாகக் கூறினார். குமரிக் கண்டம் நாம் நினைப்பது போல் சிறியது இல்லை; மிகவும் பெரியது என்றார்.
ஆப்ரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, தெற்கில் அண்டார்டிகா வரை குமரிக் கண்டம் பரவி இருந்ததைச் சுட்டிக்காட்டிய சுதா சேஷையன், உலகத்திலேயே ஆதி மனிதன் முதன் முதலாக தோன்றிய கண்டம் குமரிக் கண்டம்தான் என்ற கருத்து விரைவில் ஆய்வுகள் மூலம் வெளியாகும் என்று உறுதிபடத் தெரிவித்தார்.
மேலும், இந்த ஆய்வு வெளியானால் உலகத்திற்கே தமிழ் முன்னோடி என்ற பெருமை நமக்கு கிடைக்கும் என்றார். மாணவ, மாணவிகள் ஆய்வில் அதிகளவில் கலந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்திய அவர், இது நமது பண்பாட்டின் ஆதாரம் என்று குறிப்பிட்டுப் பேசினார்.
தமிழ்நாட்டின் பெருமை, தமிழ் மொழியின் பெருமை, தமிழ் நாகரிகத்தின் பெருமை, தமிழ்ச் சமூகத்தின் பெருமை எல்லாம் ஆய்வின் மூலம் முழுமையாக வெளிவரும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், தென்குமரி தமிழ்ச் சங்கத் தலைவர் ராஜகோபால், ஒருங்கிணைந்த பெருங்கடல் சார் பண்பாட்டு நடுவண் தலைவர் ஒரிசா பாலு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.