கன்னியாகுமரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை, பொது சுகாதாரத் துறை சார்பில் கன்னியாகுமரி தங்கும் விடுதி, உணவு உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி கன்னியாகுமரி சீ வியூ ஹோட்டலில் நடைபெற்றது.
இதில் பேசிய சுகாதாரத்துறை இணை இயக்குநர் டாக்டர் போஸ்கோ ராஜா, “சீனாவில் இருந்து பரவி இன்று பல்வேறு நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவிவருகிறது. கன்னியாகுமரியில் உள்ள ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், படகுத்துறை போன்ற சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நோய் பரவாமல் இருக்க அனைவரும் சுத்தமாக இருக்க வேண்டும். குறிப்பாக வெளியில் சென்று வந்தால் கை கழுவும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். தும்மல் வந்தால் கர்ச்சீப் போன்றவற்றால் முகத்தை மூடிகொண்டு தும்ம வேண்டும். யாருக்காவது கொரோனா நோய் அறிகுறி தென்பட்டால் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறவேண்டும். தற்போது சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை விமான நிலையத்தில் பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். கன்னியாகுமரி மாவட்ட எல்லையில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ குழுக்கள் மூலமாக தீவிர பரிசோதிக்குட்பட்டப் பின்னரே பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர். குமரி மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. எனவே பொதுமக்களோ, சுற்றுலாப் பயணிகளோ அச்சப்படத் தேவையில்லை. கொரோனா வைரஸ் காய்ச்சல் தொடர்பாக 104 என்ற அவசர எண்ணில் 24 மணிநேரமும் தொடர்புகொண்டு தங்கள் சந்தேகங்களைக் கேட்டு விளக்கங்களைப் பெற்றுக்கொள்ளலாம்” இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க : திரைப்படங்களும் எங்களுக்குப் பாடம்தான்: அசத்தும் காமராசர் பல்கலைக்கழக தொடர்பியல் துறை மாணாக்கர்