கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் இதுவரை 300க்கும் மேற்பட்ட நோயாளிகள் கரோனா அறிகுறி காரணமாக தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 15 பேருக்கு கரோனா தோற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனைக்கு கரோனா அறிகுறியுடன் வரும் நோயாளிகளின் ரத்தம், சளி மாதிரிகள் நெல்லை, சென்னைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இதனால் அவர்களின் பரிசோதனை முடிவுகள் வருவதற்கு சில நாட்கள் தேவைப்பட்டன.
இதனையடுத்து கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகளின் உறவினர்கள், வீட்டின் அருகில் உள்ளவர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத் துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு கரோனா உள்ளதா என்பதை உறுதி செய்ய காலதாமதம் ஏற்பட்டு வந்தது.
இதற்கிடையில் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கரோனா தொற்றைக் கண்டறியும் வைராலஜி கருவி வேண்டும் என தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தமிழ்நாடு முதலமைச்சர் கோரிக்கை வைத்திருந்தார்.
இதன்பின் இந்தக் கருவி இன்று (ஏப்.13) முதல் அரசு மருத்துவக் கல்லூரியில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இனி குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.