கன்னியாகுமரி: இந்திய மருத்துவ சங்கத்தின் அகில இந்திய தலைவராக குமரி பேராசிரியர் மருத்துவர் ஜெயலால் தேர்வுசெய்யப்பட்டார்.
இந்திய மருத்துவ சங்கம், இந்தியாவில் நான்கு லட்சம் மருத்துவர்களைக் கொண்டு 1928ஆம் ஆண்டுமுதல் செயல்பட்டுவருகிறது. இது, இந்திய மருத்துவ கொள்கை முடிவு எடுப்பதிலும் மருத்துவர்கள்-அரசிற்கு இடையே பாலமாகச் செயல்படுகிறது.
கடின கொள்ளை நோய் காலங்களில், தன்னார்வ தொண்டு மருத்துவமனைகளை நெறிப்படுத்துதல் போன்ற நிலைகளில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் அமைப்பாகவும் இது திகழ்கிறது.
இந்த அமைப்பில் நடைபெற்ற தேர்தலில் கன்னியாகுமரி குழித்துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஜெயலால் வரும் ஆண்டிற்கான அகில இந்திய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அதன் செயலராக மகாராஷ்ராவைச் சேர்ந்த மருத்துவர் ஜேயிஸ் லீவே என்பவரும், பொருளாளராக டெல்லியைச் சேர்ந்த மருத்துவர் அனில் கோயலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
புதிய நிர்வாகிகள் அனைவரும் டிசம்பர் மாதம் பதவி ஏற்கின்றனர். தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மருத்துவர் ஜெயலால் இந்திய மருத்துவ சங்கத்தில் பல பதவிகளை வகித்தவர். 2018ஆம் ஆண்டு தமிழ் மாநிலத் தலைவராகவும், 2019இல் அகில இந்திய துணைத் தலைவராவும் பணியாற்றியுள்ளார்.
மருத்துவர் திறமையை மேம்படுத்தும் தொடர் கல்வி முறையை ஒழுக்கப்படுத்தி பல்வேறு வகையான திறன் மேம்பாட்டு பயிற்சி முறைகளை நடத்தியதில் முக்கியப் பங்குவகித்தவர்.
இந்திய மருத்துவ சங்கத்தின் பொது மருத்துவர் பயிற்சி கல்லூரி செயலராக பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். குடும்ப மருத்துவ முறையை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு கருத்தரங்குகளை நடத்தி, குடும்ப மருத்துவ முறை மருத்துவம் என்கிற உலக அங்கீகாரம் பெற்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
56 நாடுகளில் மருத்துவ சங்கங்களின் வளர்ச்சிக்கும் தனித்தன்மைக்கும் கேடு விளைவிக்கும் கொள்கைக்கான கருத்துகளை மத்திய அரசிடம் எடுத்துச் சொல்லி மாற்றியமைப்பது, தேசிய அளவிலான மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் இயற்றுவது, இந்தியாவின் அனைத்து கிராமங்களுக்கும் நவீன மருத்துவம் சென்றடைய மருத்துவ பட்ட மற்றும் பட்ட மேற்படிப்புகளை நெறிமுறைப்படுத்துவது போன்ற மிகப்பெரிய சவால்கள் அனைத்தையும் மருத்துவர்கள், சமூக செயற்பாட்டாளர்களுடன் இணைந்து மேம்படுத்துவதிலும், ஒருங்கிணைந்த ஆரோக்கிய சமுதாயத்தை உருவாக்கும் பணியில் அர்ப்பணிப்போடு ஈடுபடுவதும்தான் தன்னுடைய தலையாய பணிகள் என ஜெயலால் தெரிவித்துள்ளார்.