கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஆண்டுதோறும் நடக்கும் நவராத்திரி விழாவில் கலந்து கொள்ள கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சாமி சிலைகளான சுசீந்திரம், முன்னுதித்தநங்கை, தேவாரகட்டு சரஸ்வதி, குமாரகோவில் முருகன் ஆகிய சாமி சிலைகள் அனுப்பப்படுவது வழக்கம்.
இந்த ஊர்வலம் பாரம்பரிய முறைப்படி யானை மீது உடைவாள் அணிவகுப்புடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரவேற்பளிக்க கேரளாவிற்கு இரு மாநில அலுவலர்கள், காவல் துறையினர் அணிவகுப்புடன் அனுப்பி வைப்பது பாரம்பரிய ரீதியாக கடைபிடிக்கபட்டு வருகிறது.
இந்நிகழ்வு கேரளாவிலிருந்து குமரி மாவட்டம் பிரிந்த பிறகும் கடைபிடிக்கபட்டு வருகிறது. இதனால் இரு மாநில ஒற்றுமையை விளக்கும் விதமாக இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சுசீந்திரம் கோயிலில் இருந்து பவனி விழா நாளை துவங்க உள்ளது. விழாவில் கலந்து கொள்ள கேரளாவிலிருந்து கொண்டு வந்த இரண்டு கேரள தேவசம் போர்டுக்கு சொந்தமான யானைகளை தமிழக கேரள எல்லைப் பகுதியான பாறசாலை பகுதியில் கேரள வனத்துறை அலுவலர்கள் தடுத்து நிறுத்தினர். தமிழகத்திற்கு யானைகளை கொண்டு செல்ல உரிய ஆவணங்கள் இல்லை என்று கூறி யானைகளை அவர்கள் சிறைப்பிடித்து வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.