கன்னியாகுமரி: நாகர்கோவில் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன். இவரது மகன் சுஜி என்ற காசி மீது சென்னையைச் சேர்ந்த பெண் இன்ஜினியர் ஒருவர் கடந்த 2020ஆம் ஆண்டு ஆபாச படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டுவதாக ஆன்லைன் மூலம் கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு புகார் செய்திருந்தார். இதே போன்று நாகர்கோவில் பகுதியிலும் ஒரு பெண் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காசியை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் சமூக வலைதளங்கள் மூலம் ஏராளமான இளம் பெண்கள், முக்கிய பிரமுகர்களின் மனைவி, கல்லூரி மாணவிகள் இவரது வலையில் சிக்கியுள்ளது தெரியவந்தது. இது தொடர்பாக நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இரண்டு வழக்கிலும், கன்னியாகுமரி மகளிர் காவல் நிலையத்தில் ஒரு போக்சோ வழக்கு, என மொத்தம் எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வடசேரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கந்து வட்டி வழக்கும், மற்ற காவல் நிலையங்களில் பெண் பாலியல் வன்கொடுமை மற்றும் பெண் ஆபாச படம் எடுத்து மிரட்டி வழக்குகள் பதிவாகியுள்ளன. காசி விவகாரம் பெருமளவில் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டது.
இதற்கிடையே சாட்சியங்களை அழிக்க முயற்சி செய்த விவகாரத்தில் அவருடைய தந்தை தங்கபாண்டியனையும் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இந்நிலையில் நாகர்கோவிலில் உள்ள மகிளா நீதிமன்ற நீதிபதி சசிரேகா கடந்த 18ஆம் தேதி முதல் இளம் பெண் புகார் குறித்த விசாரணையை நடத்தி வந்தார்.
அதில் பாளையங்கோட்டை சிறையில் இருக்கும் காசி மற்றும் அவர் தந்தை தங்க பாண்டியன் ஆகிய இருவரும் பாலியல் புகார் குறித்த விசாரணைக்காக இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டனர். மகிளா நீதிமன்ற நீதிபதி சசிரேகா 10-க்கும் மேற்பட்ட சாட்சியங்களிடம் நேரில் வாக்குமூலம் வாங்கினார். புகார் கொடுத்த இளம் பெண்ணும் சாட்சியளித்தார்.
இதையும் படிங்க: பாடப்புத்தகம் கொண்டு செல்லாததால் 9ஆம் வகுப்பு மாணவனுக்கு பிரம்படி - ஆசிரியர் சஸ்பெண்ட்!