முன்னாள் மத்திய இணை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நம்முடைய நாட்டின் ஒரு பகுதி மக்களை எந்த காரணத்தை கொண்டும் தனிமைபடுத்தக்கூடாது என்ற நோக்கில் தற்போது நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்கள் மூலமாக காஷ்மீர் முழுமையாக பிறபகுதி மக்களோடு இணைக்கப்பட்டுள்ளது.
தற்போது கொண்டு வரப்பட்டுள்ள இந்த மாற்றம் நிச்சயம் 70ஆண்டுகளாக இல்லாத முன்னேற்றத்தையும், வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தும். இந்தியாவின் அசைக்க முடியாத ஒரு அங்கமாக காஷ்மீர் விளங்கும். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் விதிமுறைகள் என்பது எப்போது வேண்டுமானாலும் மாற்றம் செய்யலாம் என்ற நிலையில் உள்ளதால் தான் அது பலமுறை மாற்றப்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதின் மூலம் இந்திய மக்களிடம் இணைந்து வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் காஷ்மீர் மக்களின் கனவு நினைவாகியுள்ளது. இதனை சிலர் திணிப்பு நடவடிக்கை என கூறுகின்றனர். ஆனால் நோய் தீருவதற்கு மருந்து சாப்பிடுவது தானே ஒரு தீர்வு.
காஷ்மீர் மாநிலத்தின் சூழ்நிலை தமிழ்நாட்டிற்கு பொருந்தாது. தமிழ்நாட்டின் சூழ்நிலை பிற மாநிலங்களுக்கு பொருந்தாது. வைகோ நாடாளுமன்றத்தில் பேசிய விஷயம் ஏற்புடையதல்ல. நாட்டில் நடக்கும் அனைத்து குற்றங்களுக்கும் காங்கிரஸ் தான் காரணம். தமிழ்நாடு தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாறக்கூடாது என்பதற்காக பல அமைப்புகள் செயல்படுகிறது. காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கிடைக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.