கன்னியாகுமரி மாவட்டத்தில் கொட்டாரம், அஞ்சுகிராமம், லீபுரம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக மாவட்ட தனிப்படை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து தனிப்படை காவல் துறையினர் அப்பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது கன்னியாகுமரி - நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒற்றைப்புளி பகுதியில் ஒருவர் சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்தார். அந்த நபரிடம் விசாரணை செய்தபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த காவல் துறையினர் அவரின் இருசக்கர வாகனத்தில் சோதனை செய்தனர்.
அப்போது அந்த நபர் இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்து கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் கொட்டாரம் பகுதியைச் சேர்ந்த அருள்முத்து (19) என்பது தெரியவந்தது.
இதேபோல், லீபுரம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பொற்றையடி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (26) ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். இவர்கள் இருவரிடம் இருந்தும் இரண்டு கிலோ கஞ்சா, இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மாவட்டத்தில் ஒன்பது கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரூ. 1.5 கோடி மதிப்புள்ள குட்கா பறிமுதல் - 3 பேர் கைது