இந்தியாவின் தென் எல்லையாகவும், புனித யாத்ரீகர்களின் புண்ணிய பூமியாகவும் விளங்கும் சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் வருகை தருகின்றனர். மூன்று கடலும் சங்கமிக்கும் இங்கு புனிதநீராடி வழிபட்டால் பாவங்கள் விலகும் என்பது நம்பிக்கை.
மேலும் சூரிய உதயமும், சூரிய அஸ்தமனம் போன்றவற்றை ஒரே இடத்தில் காணும் வகையில் அமைந்துள்ள சுற்றுலாத் தலமாக விளங்குவதால், நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து கடல் அழகை ரசிப்பதற்காகவும், கடல்காற்று வாங்குவதற்கும் வருகின்றனர்.
முக்கடலும் சந்திக்கும் கன்னியாகுமரியை நாட்டின் முக்கிய தீர்த்தங்களில் முக்கியமானதாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி சாதுக்கள், துறவிகள், சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் கடலில் நீராடி சாமிதரிசனம் செய்யும் வகையில் முக்கடலை சீரமைத்து, தினமும் கடலுக்கு ஆரத்தி எடுத்து வழிபாடு செய்யும் வகையில் மத்திய அரசு சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 3.81 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதன் விளைவாக திரிவேணி சங்கமத்தை சீரமைக்கும் பணி தொடங்கியது. இதன்மூலம் 9 பணிகள் செய்யப்பட உள்ளன. சுற்றுலாப் பயணிகள் அமர்ந்து கடலை பார்வையிடும் வகையில் திரிவேணி சங்கமம் பகுதியில் அரங்கு அமைத்தல், கடலில் நீராடுவர் வசதிக்காக உடைமாற்றும் அறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம், கண்காணிப்புப் படக்கருவி, நடைபாதை, மின்விளக்கு வசதி உள்ளிட்டவை செய்யப்படவுள்ளன.
முதற்கட்டமாக இந்த பகுதி பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கப்பட்டு சமன் செய்யப்படுகிறது. இந்த திட்டம் சுற்றுலாப் பயணிகள், பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.