உலகம் முழுவதும் கரோனா தொற்றுநோயால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. கரோனா குறித்த பல விழிப்புணர்வுப் பாடல்கள், ஓவியங்கள், நாடகங்கள், கருத்துகள், காணொலிகள் உள்ளிட்டவற்றை தன்னார்வல அமைப்பினர், கலைஞர்கள் வெளியிட்டுவருகின்றனர்.
இந்நிலையில் கரோனா தொற்று நோய் குறித்த விழிப்புணர்வைப் பொதுமக்களிடம் ஏற்படுத்தும்விதமாக கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த இந்தியாவின் முதல் திருநங்கை கிராமிய வில்லுப்பாட்டு கலைஞரான சந்தியா தேவி, அவரது குழுவினர் இன்று தோவாளை பகுதியில் அமைந்துள்ள முத்தாரம்மன் கோயிலில் தனிநபர் இடைவெளிவிட்டு கரோனா விழிப்புணர்வு வில்லுப்பாட்டு நடத்தினர்.
இதில் நாம் கைகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும், வெளியே செல்லும்பொழுது கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும், தனிநபர் இடைவெளியைப் பின்பற்ற வேண்டும், அரசு சொல்லும் விதிமுறைகளைக் கட்டாயம் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்பன குறித்து விழிப்புணர்வு வில்லுப்பாட்டு பாடல் பாடினர்.
இந்த வில்லுப்பாட்டு காணொலி ஃபேஸ்புக், வாட்ஸ்அப்பில் அதிகம் பகிரப்பட்டதால் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் பார்க்க: ராஜஸ்தானில் பிறந்த குழந்தைக்கு கரோனா!