சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சூரிய உதயம், சூரிய அஸ்தமனம், முக்கடல் சங்கமம், விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை, பகவதி அம்மன் கோயில் உள்பட பல இடங்கள் சுற்றி பார்க்க உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கில் வருகை தருகின்றனர்.
தற்போது கோடை விடுமுறை தொடங்கியதை முன்னிட்டு, இங்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை காத்துக்கொள்ள சுற்றுலா பயணிகள் அதிகாலையிலேயே கடலுக்கு வந்து இரவு வரை இங்கேயே இருந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதிகாலையில் சூரிய உதயத்தைக் காண வரும் சுற்றுலா பயணிகள், பின்னர் கடல் நடுவே அமைந்துள்ள விவவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு படகு சவாரி செய்கின்றனர். இதைத் தொடர்ந்து பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோயில், காந்தி மண்டபம், காமராஜர் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றுவந்து, பிறகு சூரிய அஸ்மனத்தை மாலையில் காணும் வரை, வெயிலில் இருந்து தங்களை காத்துக் கொள்ள பகல் நேரத்தை முக்கடல் சங்கமம் கடலில் நீராடிய படி குடும்பத்துடன் விளையாடி மகிழ்கின்றனர்.