தமிழ்நாட்டிலுள்ள மலர் சந்தைகளில் மிகவும் புகழ் பெற்றது குமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையாகும். இங்கு ராயக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் உள்ளூர், சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்தும் தினந்தோறும் பல டன் பூ இறக்குமதியாகும்.
இந்தச் சந்தைக்கு வரும் பூ கேரளா மாநிலம், சிங்கபூர், இலங்கை, மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கும் தினந்தோறும் ஏற்றுமதி செய்யப்பட்டுவருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதால் தோவாளை மலர் சந்தையில் பூ விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு கிலோ ஒன்று 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பிச்சி பூ மூன்று மடங்கு விலை உயர்ந்து இன்று ஆயிரம் ரூபாய்க்கும் - 300 ரூபாய் விற்பனையான மல்லிப் பூ நான்கு மடங்கு விலை உயர்ந்து ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுவருகிறது.
அரளிப் பூ கிலோ 80 ரூபாயிலிருந்து 250 ரூபாயாகவும் சம்பங்கி பூ 80 ரூபாயிலிருந்து 150 ரூபாயாகவும் ரோஜா பூ கிலோ 80 ரூபாயிலிருந்து 150 ரூபாயாகவும் விலை அதிகரித்துள்ளது. மேலும் தாமரை, கனகாம்பரம் உள்பட அனைத்து பூவின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளன. பூ விலை உயர்ந்துள்ளதால் தோவாளை மலர் சந்தையில் பூ வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:பெரம்பலூரில் கேந்தி பூக்கள் சாகுபடி தீவிரம்!