கன்னியாகுமரி: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற திருதலங்களில், வரலாற்று சிறப்பு வாய்ந்த சுசீந்திரம் தாணுமாலயசாமி கோயிலும் ஒன்று. இந்த கோயிலுக்கு உள்ளூர் மட்டுமல்லாமல், வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவர்.
அத்தகைய பெருமை வாய்ந்த இக் கோயிலில் ஆண்டு தோறும் மார்கழி மாத திருவிழா பத்து நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் மார்கழி மாத திருவிழா தொடங்கியது. இதில் மூன்றாம் நாளான நேற்று (டிசம்பர் 31) நள்ளிரவில் மக்கள் மார் சந்திப்பு என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவிழாவின் போது, வடக்கு தெருவில் கொட்டாரம் வாசலில் வைத்து கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி, வேளிமலை முருகன் ஆகிய மூவரும் தனது தாய், தந்தையர் வீட்டில் நடக்கும் விழாவை காண வருகைதந்தனர்.
பின்னர் உமா மகேஸ்வரர், விஷ்ணு, அம்பாள் ஆகியோர் அமர்ந்திருக்கும் வாகனங்களை விநாயகரும், சுப்ரமணியரும் மூன்று முறை சுற்றி வலம் வந்து ஆசி பெறுவார்கள். பின்னர் இரு புறமாக கிழக்கே பார்த்து அனைவரும் சேர்ந்து நின்று பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.
இதில் குமரி மாவட்டம் மட்டுமல்ல கேரளாவில் இருந்தும் திரளான பக்தர்கள் வருகை தந்து மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சியை பார்த்து சுவாமி தரிசனம் பெற்றனர்.