கன்னியாகுமரி மாவட்டத்தில் காணாமல்போன 71 செல்போன்களை உரியவர்களிடம் நேற்று (ஜூலை. 3) மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் ஒப்படைத்தார். இதைத்தொடர்ந்து "போதை வேண்டாமே நண்பா" என்ற விழிப்புணர்வு குறும்படத்தையும் வெளியிட்டார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த அவர், "கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று ஏழு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 71 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு ஆண்டில் 500 செல்போன்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கஞ்சா தொடர்பாக கடந்த ஒரு மாதத்தில் 56 வழக்குகள் போட்டிருக்கிறோம். 61 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 232 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் 121 ரௌடிகளிடம் நன்னடத்தை பிணையம் எழுதி வாங்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
190 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 197 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2,500 லிட்டர் மது பறிமுதல் செய்யப்படுள்ளது. கனரக வாகனங்களில் அதிக பாரம் ஏற்றிச்செல்வதாக வந்த புகாரைத் தொடர்ந்து கடந்த ஒரு வாரத்தில் நடந்த சோதனையில் 952 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 22 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 10ஆம் தேதி முதல் இன்று வரை முகக்கவசம் அணியாதவர்கள் மீது 30 ஆயிரம் வழக்குகள் போடப்பட்டுள்ளன. அதன் மூலம் 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது" என்றார்.