கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மழைநீர், விவசாய விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்கள் சேதமாயின.
அதேபோல் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவதிபட்டு வருகின்றனர். பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட புத்தேரி, ஊட்டுவாழ்மடம், கோட்டார், போன்ற பகுதியில் உள்ள குளம் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. வெள்ளம் புகுந்த இடத்திற்கு நாகர்கோயில் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ஆர். காந்தி நேரில் சென்று பார்வையிட்டார்.
பின்னர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறியவர் அவர்களுக்கு தேவையான அடிப்படைவசதிகளை செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தவிட்டார்.
பின்னர் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் விவசாயிகளுக்கு கோடி கணக்கில் நஷ்டம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அரசு இதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் எனவும் அவர் அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க:கனமழையால் புத்தேரி குளம் உடைப்பு: நீரில் மூழ்கிய விவசாய நிலங்கள்