குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் காசி. இவர் சமூக வலைதளங்கள் மூலமாக இளம்பெண்களைத் தொடர்புகொண்டு காதலிப்பது போல் நடித்து அவர்களோடு தனியாக இருப்பதை படம் எடுத்து மிரட்டி பணம் பறித்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அதையொட்டி, பாதிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த இளம் பெண் மருத்துவர் அளித்த புகாரில் காசி கைது செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, நான்கு பெண்களும் ஒரு இளைஞரும் கொடுத்தப் புகாரில், ஒரு போக்சோ வழக்கு, இரண்டு பாலியல் வன்புணர்வு வழக்கு, ஒரு கந்துவட்டி வழக்கு என காசி மீது ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதனிடையே, காசி குண்டர் சட்டத்தில் கைதானார். இந்த வழக்குகள் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டன. சிபிசிஐடி காவல் துறையினர் காசியைக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டதன் அடிப்படையில், ஐந்து நாள் காவலில் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சிபிசிஐடி காவல் துறையினர் காசியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த காவல் முடிந்ததைத் தொடர்ந்து, காசி, அவரது நண்பர் டைசன் ஜினோ ஆகியோர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். காசியின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட மெமரி கார்டு, மொபைல் போன் உள்ளிட்டவை சைபர் கிரைம் காவல் துறையினர் உதவியுடன் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், காசி கொடுத்த தகவலின் அடிப்படையில் கணேசபுரம் பகுதியில் அவரது வீட்டின் அருகிலுள்ள தினேஷ் என்ற இளைஞரை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்து அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, தினேஷிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட விலை உயர்ந்த போனை ஆய்வு செய்தபோது அதில் பல அடல்ட் படங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. காசியுடன் கூட்டு சேர்ந்து இவரும் பல பெண்களைப் பாலியல் வல்லுறவு செய்து இருக்கலாம் என சிபிசிஐடி காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இதன்மூலம் காசியுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த மேலும் பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : சீன ஊடகங்களுக்கு கிடுக்குப்பிடி போட்ட அமெரிக்கா!