இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. முக்கடலும் சங்கமிக்கும் இந்த புண்ணிய ஸ்தலத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் புனித நீராடி வருகின்றனர். மேலும், ஊர் திருவிழா, கோயில் கும்பாபிஷேகங்களுக்கு இங்கிருந்துதான் புனித நீர் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்தச் சிறப்பு வாய்ந்த கடற்கரை தற்போது புனித நீர் எடுக்க முடியாத அளவுக்கு சீரழிந்து கிடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலையின்போது இடிபாடுகளுக்குள்ளான கட்டடங்களின் கற்களும் பாறைகளும் முக்கடல் சங்கமிக்கும் பகுதியில் குவிந்து கிடக்கின்றன.
சுனாமி தாக்குதல் நடந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் இடிந்து விழுந்த பாறாங்கற்கள் இன்றுவரை அகற்றப்படவில்லை. இதையடுத்து, கடல் அரிப்பைத் தடுக்க பல கோடி ரூபாய் செலவில் குண்டு கற்களை செயற்கையான முறையில் நிறுவப்பட்டது. ஆனால், இந்தச் செயற்கை குண்டு கற்களினால் சுற்றுலாப் பயணிகள் பக்தர்கள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராட முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.
அந்தக் குண்டுகள் கடலின் இயற்கை அழகை கெடுக்கும் வகையில் இருப்பதாக சுற்றுலாப் பயணிகள் தெரிவிக்கின்றனர். ஆடி, தை, அமாவாசை போன்ற விசேஷ நாட்களில் இந்தப்பகுதியில் நீராட வரும் பக்தர்கள், கடற்கரையில் குளித்து முடித்து குண்டுகளின் வழியே செல்லும்பொழுது ரத்தக் காயங்களுடன் திரும்புகிற பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், முக்கடல் சங்கமத்தில் ஏற்கனவே போடப்பட்டிருந்த அலை தடுப்புச்சுவரினால் கடலரிப்பு ஏற்பட்டு, கடல் நீர்ப்பிடிப்புப் பகுதி குறைந்து பாறைகளும் மணல் திட்டுகளும்தான் மக்களுக்கு காட்சிப்பொருளாக தெரிகிறது. எனவே, தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுத்து குண்டுகளை மாற்றி கடலில் குளிக்க அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.