சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் வெளிநாடு, உள்நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்கின்றனர். இங்கு கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலையைப் பார்வையிட பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் படகுகள் இயக்கப்படுகின்றன. தற்போது பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக படகுத்துறையில் சீரமைப்புப் பணிகள் நடந்துவருவதால் அங்கு கடல் பகுதியில் குவிந்து கிடக்கும் மணலை ராட்சத இயந்திரம் மூலம் எடுத்து கரையில் குவித்துவைக்கின்றனர்.
பின்னர் அந்த மணல் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக வளாகத்தில் உள்ள ஒளிப்படக் கூடம் பகுதியில் வாகனங்கள் மூலம் கொண்டு கொட்டப்படுகிறது. கடந்த சில நாள்களாக கன்னியாகுமரி பகுதியில் அதிக காற்று வீசுவதால் அங்கு குவிக்கப்பட்டுள்ள மணல், காற்றில் பறந்து அந்தப் பகுதியெங்கும் பரவுகின்றது. இதனால் அங்குள்ள கடைகள், விற்கப்படும் பொருள்கள், திண்பண்டங்கள் ஆகியவற்றில் மணல் படிவதுடன் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் கண்கள், தலையில் மணல் விழுகிறது.
இதனால் சுற்றுலாப் பயணிகள், பகவதி அம்மன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகிவருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக வளாகத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள மணலை உடனடியாக வாகனங்கள் மூலம் ஏற்றி மாற்று இடத்திற்குக் கொண்டுசெல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்களும் வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க : தமிழ்நாடு பட்ஜெட் 2020: ஓய்வூதியத்திற்கான செலவினம் ரூ.32,008.35 கோடியாக மதிப்பீடு!