கன்னியாகுமாரி மாவட்டத்தில் அரசு ரப்பர் கழகத்தின் கீழ் உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே வழங்கப்பட வேண்டும். ஆனால், நிர்வாகம் இதுவரை தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து கடந்த ஒரு வாரமாக ரப்பர் பால் வெட்டும் பணிக்குச் செல்லாமல் சுமார் 3500க்கும் மேற்ப்பட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதைத் தொடர்ந்து அரசு ரப்பர் கழக நிர்வாகத்திற்கும் தொழிற்சங்கத்தினருக்கும் பலகட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அனைத்துப் பேச்சுவார்த்தையும் தோல்வியிலேயே முடிவடைந்தது. இதனிடையே நேற்று தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் முன்னிலையில் தோவாளை அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து 50ஆவது முறையாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.
சுமார் இரண்டு மணி நேரமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களின் ஊதியம் பழைய நடைமுறைப்படியே வழங்கமுடியும் எனவும் ஊதியத்தை அதிகரிக்க முடியாது எனவும் அரசு ரப்பர் கழக நிர்வாகம் உறுதியாகத் தெரிவித்தது. இதனால் அதிருப்தியடைந்த ரப்பர் பால் வெட்டும் தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டனர். மேலும் அரசு ரப்பர் கழக நிர்வாகம் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு ஊதியத்தை உயர்த்தி தரும்வரை ரப்பர் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவித்தனர்.
இதனால் அரசு ரப்பர் கழக நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையே 50ஆவது முறையாக நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியிலேயே முடிந்தது. கடந்த ஒரு வாரமாக 3500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் ஒரு நாளுக்கு 20 டன் ரப்பர் பால் உற்பத்தி முடங்கியுள்ளதாகவும் இதனால் நிர்வாகத்திற்குத் தினந்தோறும் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுவருவதாகவும் தொழிலாளார்கள் கூறுகின்றனர்.
இதுதொடர்பாக தொழிற்சங்கத்தினர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படும் என எண்ணிய தொழிற்சங்கத்தினருக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், வேலைநிறுத்தத்தைத் தொடர்வதாகவும் உடனடியாக தமிழ்நாடு முதலமைச்சர் இப்பிரச்னையில் நேரடியாகத் தலையிட்டு தொழிலாளர்களின் சம்பள உயர்வு பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும் எனவும் தெரிவித்தனர். ஒப்பந்த தொழிலாளர்கள் மூலம் வேலை செய்ய நிர்வாகம் முயன்றால் அதைத் தாங்கள் எதிர்கொள்வோம் எனவும் அவர்கள் கூறினர்.
இதையும் படிங்க: ரப்பர் தொழிற்சாலையில் தீ விபத்து - பொருள்கள் எரிந்து நாசம்