கன்னியாகுமரி: கொல்லங்கோடைச் சேர்ந்தவர், பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ (29). இவர் பேச்சிப்பாறை, பிலாங்காலை ஆகிய தேவாலயங்களில் பங்குத் தந்தையாக இருந்துள்ளார். இந்த நிலையில் நர்சிங் மாணவி ஒருவருக்கு வாட்ஸ்அப்பில் ஆபாச சாட்டிங் செய்த வழக்கில் சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்த நிலையில் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பாதிரியாரை வரும் ஏப்ரல் 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் பல புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர். இதனிடையே காவல் துறையினரின் பிடியில் சிக்காமல் இருக்க, தனது செல்போனின் சிம்கார்டை மாற்றியுள்ளார். மொத்தத்தில் மூன்று புதிய செல்போன்களை வாங்கியவர், 11 சிம் கார்டுகளை மாற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக இவர் 12ஆம் வகுப்பு படித்து விட்டு இறையியல் கல்வி, தத்துவியல் உள்ளிட்டவற்றைப் படித்துள்ளார். இவருக்கு ஆங்கிலம், மலையாளம், தமிழ் ஆகிய 3 மொழிகள் தெரியும். சென்னையில் பயிற்சி காலத்தின்போது ஒரு பெண்ணின் அறிமுகம் கிடைத்துள்ளது. அந்தப் பெண்ணை பாதிரியார் காதலிக்கத் தொடங்கி உள்ளார். காதலித்தவர்கள் பின்னர் மிக நெருக்கமாக இருந்துள்ளனர். கத்தோலிக்க பாதிரியார்கள் திருமணம் செய்து கொள்ளாமல், சேவை ஆற்ற வேண்டும் என்பது மரபு.
ஒரு கட்டத்தில், தான் படித்த இறையியல் தத்துவத்துக்கு எதிராக நடந்து கொள்வது பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவுக்கு நெருடலை ஏற்படுத்தியதாகவும், எனவே பாதிரியார் பொறுப்பில் இருந்து வெளியேறி உயிருக்கு உயிராக காதலித்த காதலியை கரம் பிடித்து குடும்ப வாழ்க்கைக்கு வர அவர் ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால் அவரது வீட்டில் உள்ளவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை என்றும், சிறு வயதிலேயே பாதிரியாராக வேண்டும் என்று குடும்பத்தார் முடிவு செய்ததால், அவரை சாதாரண வாழ்க்கைக்கு வர வேண்டாம் என குடும்பத்தினர் கூறினார்களாம்.
தனது ஆசை காதல் நிறைவேறாத பிறகும், அந்தப் பெண்ணுடன் அவர் தொடர்ந்து பழகி உள்ளார். இருவரும் அவ்வப்போது வீடியோ காலில் பேசுவது வழக்கமாக இருந்துள்ளது. அவ்வாறு பேசும் சமயங்களில்தான் அந்தரங்க காட்சிகளை வீடியோவில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோக்களை லேப்டாப் ஒன்றில் பதிவு செய்தும் வைத்துள்ளார். சென்னையில் உள்ள அந்தப் பெண் அவ்வப்போது குமரி மாவட்டத்திற்க்கு வந்து, பாதிரியாரைத் தனியாக சந்திப்பது வழக்கமாக இருந்துள்ளது.
இது தவிர தனக்கு அறிமுகமான அனைத்து இளம்பெண்களுடன் செல்ஃபி எடுத்து, போட்டோக்களை லேப்டாப்பில் பாதுகாத்து வைத்துள்ளார். மேலும் புதிய புதிய இளம் பெண்களுடன் வாட்ஸ்அப் சாட்டிங் செய்வது பாதிரியாரின் பொழுதுபோக்காக இருந்துள்ளது. சாட்டிங் செய்யும்போதே இளம் பெண்களின் மனநிலையில் என்ன என்பதை புரிந்து கொண்டு விடுவாராம் இந்த பாதிரியார்.
யாரையும் மிரட்டியோ, அச்சுறுத்தியோ எதுவும் செய்யவில்லை என பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ கூறி உள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்ததாக தகவல் கசிந்து உள்ளது. அதேநேரம் பாலியல் குற்றச்சாட்டில் காவல் துறையினரிடம் மாட்டிக் கொண்ட பாதிரியாரின் மனநிலை எப்படி இருக்கும், அவர் காவல் துறையின் விசாரணைக்கு எப்படி பதில் அளித்துள்ளார் என்பதனைப் பற்றி காவல் அதிகாரியோடு பேசும்போது, விசாரணைக்கு எந்த ஒரு தயக்கமும் இன்றி பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ பதில் அளித்தாகவும், லேப்டாப்பில் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் குறித்த கேள்விகளை காவல் துறையினர் கேட்டபோது, தன்னுடன் புகைப்படத்தில் நெருக்கமாக இருக்கும் பெண் தனது முன்னாள் காதலி என்றும், பாதிரியார் என்பதால் அவரைத் திருமணம் செய்ய முடியவில்லை என்று வருத்தப்பட்டதாகவும், இருவரும் விருப்பப்பட்டு பிரிந்து விட்டதாகவும் கூறி உள்ளார்.
மேலும் போலீசார் ஆபாச சாட்டிங் குறித்த விவரங்களையும் கேட்டுள்ளனர். அது தனக்கு ஒரு பொழுதுபோக்கு என்றும், எந்த ஒரு கேள்விக்கும் எந்த ஒரு தயக்கமும் இன்றி பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ பதில் அளித்ததாகவும் போலீசாரின் அனைத்து கேள்விகளுக்கும் உடனுக்குடன் பதில் கூறியதாகவும், சுமார் 30 நிமிடங்களில் போலீசாரின் கேள்விகள் அனைத்திற்கும் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ பதிலளித்து முடித்ததாக கூறிய அதிகாரி, பாதிரியாருடன் நெருக்கமாக இருந்த பெண்ணிடமும் போலீசார் சில தகவல்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.
அவரும் அதற்கு உரிய பதிலை கூறியுள்ளதுடன், சமூக வலைதளங்களில் பரவும் தனது படங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாரிடம் கோரிக்கையும் வைத்துள்ளார். போலீசாரும் இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியும் அளித்ததாக தெரிவித்தார். இதற்கிடையில் பாதிரியாரின் லேப்டாப் மற்றும் செல்போனில் இருந்த ஆபாச படங்கள் மற்றும் சாட்டிங்கை வெளியிட்டவர்கள் குறித்த விவரங்களை போலீசார் ரகசியமாக சேகரித்து வருகிறார்கள்.
ஏற்கனவே பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ கொடுத்த புகாரின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றொருவர் தலைமறைவாகி உள்ளார். அவரிடம்தான் பாதிரியாரின் செல்போன் இருப்பது தெரிய வந்துள்ளது. அவரையும் கைது செய்தால்தான், பாதிரியார் செல்போனில் என்ன விவரங்கள் உள்ளது என்ற முழு விவரமும் தெரிய வரும். இதனையடுத்து தலைமறைவாகியுள்ள அந்த நபரை பிடிக்க சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
போலீசார் தேடுவதை அறிந்த நபர் தற்பொழுது கேரளாவில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர். அந்த நபரை கைது செய்த பிறகுதான் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆபாச வீடியோ புகாரில் பாதிரியார் ஆன்றோவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!