கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் பெயரில் போலி பேஸ்புக் (முகநூல்) கணக்கு தொடங்கி சில கும்பல் சமூக விரோத செயல்களில் ஈடுபட முயன்றது. இந்தக் கும்பலை காவலர்கள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.
இந்நிலையில், சுசீந்திரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரியும் ஆறுமுகம் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்க முயன்ற சம்பவங்கள் அறங்கேறின. இதற்கிடையில், சனிக்கிழமை (ஏப்.10) வடசேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சத்தியசோபன் பெயரில் போலியான பேஸ்புக் தொடங்கி பணம் பறிக்க முயற்சித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து காவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர். தொடர்ச்சியாக காவல் அலுவலகம், காவலர்கள் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு பணம் பறிக்க முயற்சி செய்தல் உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் ஈடுபட்டுவருவது பொதுமக்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.