தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக குமரி மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது.
பகல் நேரங்களில் சாலையில் கானல் நீர் தெரியும் அளவிற்கு வெப்பம் உச்ச நிலையை அடைந்துள்ளது. கடந்த காலங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டியது இல்லை. ஆனால் வரலாற்றில் முதல் முறையாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வெயில் 100 டிகிரியை தாண்டியது.
மேலும், கோடை காலத்தை முன்னிட்டு சாலையோரங்களில் இளநீர், நுங்கு, தர்பூசணி, பதநீர், கூழ் உள்ளிட்ட குளிர்பான கடைகள் அதிகம் காணப்படுகின்றது.
வெப்பத்தில் இருந்து தப்பிப்பதற்காக பொதுமக்கள் பகல் நேரங்களில் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.