கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களுக்கு இடையே எல்லையில் அமைந்துள்ளது முப்பந்தல் ஆலமூடு இசக்கி அம்மன் கோயில். இசக்கி அம்மனை இரு மாவட்ட மக்களும் எல்லை சாமியாக வழிபட்டுவருகின்றனர்.
கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் மிக விமரிசையாக பூக்குழிக் கொடை விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில் சிறப்பம்சமாக நள்ளிரவில் 13 யானைகளைக் கொண்டு இசக்கி அம்மனுக்கு கஜ பூஜை நடைபெறவிருந்தது. இதில் கலந்துகொள்வதற்காக தமிழ்நாடு, கேரள மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்துள்ளனர்.
இந்நிலையில் கோயிலில் அம்மனுக்கு யானைகளை கொண்டு கஜ பூஜை நடத்துவதற்கு வனத் துறை திடீரென தடை விதித்தது. இதனால் கஜ பூஜை நிகழ்ச்சிக்காக வந்திருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். மேலும் இது தொடர்பாக வனத் துறை அலுவலர்களிடம் கோயில் சார்பில் கேட்டதற்கு அவர்களுக்கு இசைவான பதில் கிடைக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள் வனத் துறையின் தடையை கண்டித்து நாகர்கோவில்-நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதை காவல் துறையினர் தடுக்கவே மேலும் கொந்தளித்த பக்தர்கள் கோயில் வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.
பல ஆண்டுகளாக நடைபெற்றுவந்த கஜ பூஜை தடைபட்டுள்ளதால் பக்தர்கள் பெரும் மன வேதனையுடன் கோயில் வாயிலிலேயே அமர்ந்துள்ளார்கள். மேலும் இன்று யானை ஊர்வலம் நடைபெற வேண்டும் என்பதால் முப்பந்தல், சுற்று வட்டாரப் பகுதியில் பதற்றம் நிலவிவருகிறது.
இதனால், அசம்பாவிதம் ஏதும் நடக்காமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.