கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையிலுள்ள சோதனைச் சாவடியில் கடந்த 8ஆம் தேதி இரவு, சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன், பயங்கரவாதிகளால் துப்பாக்கியால் சுடப்பட்டும் கத்தியால் குத்தப்பட்டும் கொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவரின் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவரது படுகொலைக்கு பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு ஆதிதிராவிட முன்னேற்ற இயக்கம் சார்பில் அதன் தலைவர் விக்டர் தாஸ் தலைமையில், படுகொலை செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் வில்சனின் ஆன்மா சாந்தியடைய வேண்டி, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன்படி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு பொதுமக்கள் மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் வில்சனுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதுகுறித்து விக்டர் தாஸ் கூறுகையில், ”கொலை செய்யப்பட்ட வில்சனின் ஆத்மா சாந்தியடைய வேண்டி, அவரைக் கொலை செய்த பயங்கரவாதிகளைக் கைதுசெய்து, அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டியும் இந்த அஞ்சலி நடைபெறுகிறது” என்றார்.
இதையும் படிங்க: குமரியில் சப்-இன்ஸ்பெக்டரை கொலை: குற்றவாளிகளை கண்டுபிடிக்க பரிசுத் தொகை அறிவிப்பு!