144 தடை உத்தரவு காரணமாக பொதுமக்கள் வேலையில்லாததால், அத்தியாவசிய பொருள்கள் வாங்க முடியாமல் மிகவும் தவித்துவருகின்றனர். குறிப்பாக தினக்கூலி தொழிலாளர்கள் அன்றாட உணவுக்கு கூட வழியின்றி வாடி வதங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம், மக்களவை உறுப்பினர் என பலரும் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களை வழங்கிவருகின்றனர். அந்த வகையில் மருங்கூர் பேரூராட்சி பகுதியில் வசித்துவரும் ஏழை, எளிய பொது மக்களுக்கு கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் நிவாரண உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வசந்தகுமார் கூறுகையில், “உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா மிகக் கொடிய நோயாகும். நாம் அதனை சாதாரணமாக எடை போடக்கூடாது. நாம் அனைவரும் விழிப்புணர்வுடன் இருப்பது மிக அவசியமாகும். அதனால், கரோனவை விரட்டியடிக்க கட்சி பாகுபாடுகளை மறந்து நாம் அனைவரும் தமிழராக ஒன்றிணைய வேண்டும்” என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க...சவுதியிலிருந்து 153 பயணிகள் கேரளா வருகை!