கன்னியாகுமரி: உலக வணிக அமைப்பின் உறுப்பு நாடான இந்தியாவில் புவிசார் குறியீடுகள் சட்டம் (பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டம்) 1999ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு 2003ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைமுறைக்கு வந்தது. இந்தியாவில் பொருள்கள் தொடர்பான புவிசார் குறியீடுகள் பதிவு மற்றும் பாதுகாப்புக்கு இந்தச் சட்டம் வழி வகுக்கிறது.
இந்தியாவின் வளர்ச்சியில் கிராமங்கள் பெரும்பங்கு வகித்து வருகின்றன. இதனால் கிராமங்களில் உற்பத்தியாகும் தனித்துவமான பொருள்களின் சிறப்புகளை நாம் மேம்படுத்தி காட்டுவது மிக அவசியம். ஆகையால் புவிசார் குறியீடு என்பது ஒரு அங்கீகாரம்.
அது நாட்டின் வளர்ச்சிக்கு காரணமாகவும் அமையும். இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் தனித்துவமாக உற்பத்தியாகும் பொருள்களுக்கு இந்திய அரசாங்கம் புவிசார் குறியீடு வழங்கி அங்கீகரிக்கிறது.
அந்த வகையில் அதிகமான பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற்றிருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
மதுரை மல்லி, திண்டுக்கல் பூட்டு, காஞ்சிபுரம் பட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, சேலம் சுங்குடி சேலை, பழனி பஞ்சாமிர்தம், மணப்பாறை முறுக்கு, மார்த்தாண்டம் தேன், நகமம் காட்டன், மயிலாடி கல் சிற்பம், சேலம் ஜவ்வரிசி, மானாமதுரை மண்பாண்டம், ஊட்டி வர்க்கி, கம்பம் பன்னீர் திராட்சை, ஆத்தூர் வெற்றிலை, சோழவந்தான் வெற்றிலை உள்ளிட்ட 56 பொருள்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இந்நிலையில் மட்டி வாழை பழத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்து உள்ளது. தமிழ்நாட்டில் விளையும் வாழைப் பழங்களில் பெரும்பாலான வகைகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் விளைவிக்கப்படுகிறது. இங்கு செவ்வாழை, நேந்திரம், பாளையங்கோட்டை, பேயன், சிங்கன், பூவன் மற்றும் மருத்துவ குணம் கொண்ட மட்டி உள்ளிட்டப் பல்வேறு வகையான வாழை ரகங்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டி, செம்மட்டி ஆகிய 2 ரகங்கள் உள்ளன. இந்த இரண்டு ரகங்களுமே மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்பட்டு வருகின்றன.
இந்த மட்டி பழம், தமிழ்நாட்டில் குமரி மாவட்டத்தில் மட்டும் பெருமளவில் உற்பத்தி செய்யபட்டு வருகிறது. குமரி மண்
மட்டி பழத்திற்கு ஏதுவான மண்ணாக உள்ளதால் விளைச்சலும் அதிகமாக உள்ளது. மட்டி வாழை மரங்கள் 8 முதல் 10 அடி உயரம் வரை வளரக் கூடியவை, மட்டி வாழையை நட்ட ஓர் ஆண்டிற்கு உள்ளாக வாழைத் தார்களை அறுவடை செய்ய முடியும். தார்கள் ஒவ்வொன்றிலும் 120 முதல் 150 பழங்கள் வரை இருக்கும். இந்த மட்டி வாழைப்பழம் இயற்கையாகவே மருத்துவ குணம் கொண்டவை.
மட்டி பழம் நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டவை, பச்சிளம் குழந்தைகள் முதல் நோயாளிகள் வரை அனைவரும் சாப்பிடுவது வழக்கம். இந்த வாழைப்பழத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்ததால் குமரி மாவட்டத்திற்கும் வாழை விவசாயிகளுக்கும் ஒரு அந்தஸ்து கிடைத்துள்ளது. இதனால், வாழை விவசாயிகளும் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மட்டி வாழைப்பழத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்து உள்ளதால் உற்பத்தி அதிகரிக்கவும் அதனால் ஏற்றுமதி அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: தரிசாகும் தஞ்சை... கருகும் நெல் பயிரை காக்க... குடத்தில் தண்ணீர் கொண்டு நீர் பாய்ச்சும் அவலம்!