கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த ஆசாரிபள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் தினகரன் (33). இவரது மனைவி எஸ்தர் ராணி (26). இருவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு குழந்தை இல்லை.
கணவன், மனைவி இருவரும் நேற்று முன்தினம் பொருள்கள் வாங்க ஆசாரிபள்ளத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு இருசக்கர வாகனத்தில் வந்தனர். பின்னர் அவர்கள் மீண்டும் ஆசாரிபள்ளம் சென்றபோது ஆட்சியர் அலுவலகம் எதிரில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர்.
அப்போது அவர்களது பின்னால் வந்த அரசுப் பேருந்து அவர்கள் மீது ஏறியது. இதில் எஸ்தர் ராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தினகரன் படுகாயங்களுடன் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதனைத் தொடர்ந்து தினகரனை மேல் சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் திருவனந்தபுரம் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவரும் தற்போது உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து நாகர்கோவில் போக்குவரத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இரு சக்கர வாகனத்தில் கார் மோதி விபத்து - ஒருவர் பலி