கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரியில் கரோனா வார்டில் சிகிச்சை பெற்றுவந்த குழந்தை உள்பட மூன்று பேர் உயிரிழந்தனர். இவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்களா என்ற சந்தேகங்கள் எழுந்தபோது, மருத்துவமனை தரப்பில் அவர்களுக்கு வெவ்வேறு நோய்கள் இருந்தததாக அறிக்கை வெளியிடப்பட்டது.
இதுகுறித்து மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் சுகந்தி ராஜகுமாரி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, "கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 3 பேர் உயிரிழந்தனர். இதில், மரிய ஜான் என்ற நபருக்கு சிறுநீரக கோளாறு, ராஜேஷ் என்ற இளைஞருக்கு நிமோனியா காய்ச்சல், இரண்டு வயது ஆண் குழந்தைக்கு எலும்புருக்கி நோய் ஆகிய பாதிப்புகளுக்காக சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களின் இரத்தப் பரிசோதனை முடிவுகள் இன்று இரவு தெரியவரும். அதன் பின்னரே, சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். இரத்தப் பரிசோதனை செய்ய நெல்லைக்கு அனுப்பப்படுவதால் முடிவுகள் அறிந்து கொள்ள கால தாமதமாகிறது.
மேலும், கரோனா சந்தேகத்தின் பேரில் அதற்கான தனிப்பிரிவில் ஒருவரும், மற்றொரு தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் 13 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இங்கு சிகிச்சை அளிப்பதற்காக 6 குழுக்களாக மருத்துவர்கள் பிரிக்கப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். தற்போது 40 வென்டிலேட்டர்கள் உள்ள நிலையில், மேலும் 30 வென்டிலேட்டர்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தொலைக்காட்சி, யூடியூப் மூலம் பாடம் நடத்தப்படுகிறது -அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்!