தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் அஸ்தி கன்னியாகுமரி கடலில் கரைக்கப்படுவதற்கு முன்பு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்ட இடத்தில் காந்தி மண்டபமும் எழுப்பப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2ஆம் தேதி காந்தி மண்டபத்தில் சூரிய ஒளி விழும் வகையில் இந்த மண்டபம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மதியம் 12 மணிக்கு மேல் 12.10 மணிக்குள் அஸ்தி வைக்கப்பட்டு இருந்த கட்டடத்தில் அபூர்வ சூரிய ஒளி விழுந்தது. இதனைச் சுற்றுலா பயணிகள் அனைவரும் கண்டுகளிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சூரிய ஒளி மண்டபத்தில் விழுவதை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் செல்ஃபோனில் படம் பிடித்தனர். இதில் கலந்து கொண்ட தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய்சுந்தரம் அங்கு சிறிது நேரம் தியானம் செய்து மலர்த் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தமிழக அரசின் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சி, கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்தது.
அஸ்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் உள்ள காந்தியடிகளின் உருவப்படத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
இதையும் படிங்க: காந்தி கண்ட தூய்மை பாரதம்...!