கன்னியாகுமரி: தமிழ்நாடு அரசு மானிய விலையில் மீனவர்களுக்கும், நாட்டுப் படகு மீனவர்களுக்கும், விசைப்படகு மீனவர்களுக்கும் மண்ணெண்ணெய் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாட்டு படகுகளுக்கு மண்ணெண்ணெய் மானிய விலையில் வழங்கப்படவில்லை. இதுகுறித்து சின்ன முட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள மீனவர்கள் மீன் வளத்துறை அலுவலர்களிடம் கேட்டபோது அதிக குதிரை திறன் கொண்ட படகு வைத்திருப்பதால் மண்ணெண்ணெய் கிடையாது என்று கூறியுள்ளனர்.
இதே போன்று நாட்டுப்படகு மீனவர்களும் மண்ணெண்ணெய் கிடைக்காமல் அலைக்கழிக்கப் பட்டு வருகிறார்கள். அதே போல, ஆரோக்கியபுரம் கடற்கரை கிராமத்தில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. சுமார் 100 நாட்டு படகுகளில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
இவர்கள் மானிய விலையில் மண்ணெண்ணெய் வாங்க சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்துக்கு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.
அப்படி செல்லும்போது பெரும்பாலான நேரங்களில் மண்ணெண்ணெய் இல்லை என்றும், ஸ்டாக் இல்லை என்றும் கூறி அலைக்கழிக்கப்படுவதால் அவர்களது ஒருநாள் வருமானத்தை இழக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.
எனவே, ஆரோக்கியபுரம் கடற்கரை கிராமத்திற்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராமவாசிகள் மனு அளித்துள்ளனர்.