கன்னியாகுமரி மாவட்டத்தின் பூம்புகார் சுற்றுலா போக்குவரத்து படகுத்துறை அருகே வாவத்துறை என்கிற மீனவ கிராமம் அமைந்துள்ளது. கரோனா பாதிப்பு காரணமாக, கூட்டம் கூடக்கூடாது என்பதை வலியுறுத்தி ஒரு ஊரில் பிடிக்கப்படக்கூடிய மீன்களை அந்தந்த ஊர்களிலேயே விற்பனை செய்திட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருந்தது.
ஆனால் அந்த உத்தரவை கடைப்பிடிக்காமல் கன்னியாகுமரி மீனவர்கள் கன்னியாகுமரி மீன் மார்க்கெட்டில் மீனை விற்பனை செய்யாமல் வாவத்துறை மீன் மார்க்கெட்டில் வந்து விற்பனை செய்துவருவதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர், மீன்வளத்துறையினர், கன்னியாகுமரி காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அலுவலர்களுக்கு பல முறை வாவத்துறை மீனவர்கள் புகார் அளித்துள்ளனர்.
ஆனால் இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் அரசின் சார்பில் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை என்கின்றனர் புகார் கொடுத்த மீனவர்கள். இதையடுத்து, புகாரின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வாவத்துறை மீனவர்கள் கடந்த ஒரு மாத காலமாக கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
நேற்று( ஜூன் 12) வாவத்துறை மீனவர்கள் தங்கள் படகுகள், வீடுகளில் கருப்புக்கொடி கட்டி தங்கள் கண்டனத்தை அரசுக்கு தெரிவித்தனர். இதுகுறித்து வாவத்துறை பங்குத்தந்தை லிகோரியஸ் கூறுகையில், “ஏறக்குறைய 40 நாள்கள் கரோனா ஊரடங்கிற்கு பிறகு மே மாதம் தொடக்கத்தில் அரசின் நிபந்தனைகளைக் கடைபிடித்து மீன் பிடிக்க சென்றோம்.
ஆனால் மே மாதம் 23ஆம் தேதியே கன்னியாகுமரி மீனவர்கள் அரசின் நிபந்தனைகளை மீறி வாவத்துறை மீன் மார்க்கெட்டில் மீன்களை விற்பனை செய்ய வந்தனர். கோயம்பேடு, காசிமேடு மார்க்கெட்களினால் சென்னை மாநகரமும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியது.
இதேபோன்று குமரி மாவட்டமும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்ற நோக்கத்தில் வாவத்துறை மீனவர்கள், சுமார் ஒரு மாத காலமாக மீன்பிடிக்கச் செல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மீனவர்களை கன்னியாகுமரி ஆலயத்தின் பின்பக்கம் உள்ள மீன் மார்க்கெட்டில் மீன் விற்பனை செய்ய அறிவுறுத்தும்படி அரசு அலுவலர்களுக்கு பல முறை மனுக்கள் கொடுத்துள்ளோம். இதுவரையிலும் எந்தவித முடிவும் வரவில்லை. இதனால் வாவத்துறை மக்கள் மிகவும் வறுமையில் வாடுகிறார்கள். வட்டிக்கு கடன் வாங்கி குடும்பத்தை நடத்த வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
இந்த அவலநிலை நீங்கி வாவத்துறை மீனவர்களுக்கு நீதி கிடைக்க கிராமம் முழுவதும் கருப்புக்கொடி கட்டப்பட்டு அரசுக்கு எங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகிறோம். எனவே கன்னியாகுமரி மீனவர்களுக்கு ஒரு தனி மீன் மார்க்கெட் அமைத்து இரண்டு ஊருக்கு இடையிலும் பிரச்னைகள் ஏற்படாத வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.